இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சேவாக், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளார். இதற்கு முக்கிய காரணம், இவர் அனைத்து விதமான ஃபார்மெட்டுகளிலும் தனது ஒரே மாதிரியான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதுதான். 1999 முதல் 2013வரை தனது கிரிக்கெட் பயணத்தில் சேவாக் ஏற்றத்தையும், இறக்கத்தையும் மாறிமாறி சந்தித்துள்ளார்.
குறிப்பாக, 2011 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்தது. இந்தத் தோல்வி தோனி, சேவாக் உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களுக்கும் மறக்கமுடியாதது.
எட்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இப்போட்டியை நினைவுக்கூர்ந்து சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதேநாளில் நான் பிர்மிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டு முறையும் டக் அவுட் ஆனேன் (கிங் பேர்). இந்த போட்டியில் கலந்துகொள்ள இங்கிலாந்துக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டேன். 188 ஓவர்கள் ஃபீல்டிங் செய்த பின்னர், நான் எடுத்த ஸ்கோரை (0,0) விருப்பமின்றி ஆர்யபட்டாவுக்கு டெடிகேட் செய்தேன். தோல்விக்கான வாய்ப்புகளை நீங்கள் கண்டறிந்து அதை களையுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
இதற்கு ஒரு ரசிகர், ’எனது தோல்விகளை கண்டுப்பிடிக்க நேரம் ஆகும், ஆனால், தோல்விகளை பகிர்ந்துகொள்ள உங்களுக்கு மட்டுமே தைரியும் உள்ளது’ என சேவாக் ட்வீட்டுக்கு பதிலளித்தார். தனது மோசமான பேட்டிங்கை நினைவுகூர்ந்த சேவாக்கின் இந்த ட்வீட் அவரது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சேவாக் இரண்டு முச்சதம், 23 சதம் என 8,586 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சார்பில் அதிக ரன்களை அடித்த ஐந்தாவது வீரர் என்ற சாதனை படைத்தார். இதுவரை 104 டெஸ்ட், 251 ஒருநாள், 19 டி20 போட்டிகளில் விளையாடிய சேவாக் 2015இல் ஓய்வு பெற்றார்.