உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடைபெறுகிறது. இந்தத் தொடரில் மொத்தம் பங்கேற்கவுள்ள 16 அணிகளில் பத்து அணிகள் ஏற்கனவே நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. இதனால் எஞ்சியுள்ள அணிகளைத் தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.
இந்தத் தகுதிச் சுற்றுப் போட்டிகளும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் தகுதிபெற்றுவிட்டன. இதனிடையே இன்று நடைபெற்ற நான்காவது பிளே-ஆஃப் போட்டியில் ஏ பிரிவில் நான்காம் இடம்பிடித்த ஸ்காட்லாந்து அணியும் முதல் பிளே-ஆஃப்பில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்த ஐக்கிய அரபு அமீரக அணியும் மோதின.
இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை குவித்தது. அந்த அணியில் ஜார்ஜ் முன்சே 65, ரிச்சி பெர்ரிங்டன் 48, கேப்டன் கைல் கோயட்ஸர் 34 ரன்களை எடுத்தனர். ஐக்கிய அரபு பந்துவீச்சில் ரோகன் முஸ்தஃபா 2, ஜுனைட் சித்திக், ஸாகூர் கான், அகமத் ராஸா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதன்பின் களமிறங்கிய ஐக்கிய அரபு பேட்ஸ்மேன்களில் ரமீஸ் ஷாஷாத் 34, முகம்மது உஸ்மான் 20, டரியஸ் டி சில்வா 19 ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 18.3 ஓவரில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஸ்காட்லாந்து அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஸ்காட்லாந்து பந்துவீச்சில் அதிகபட்சமாக மார்க் வாட், சாபியான் ஷரிஃப் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பை டி20 தொடருக்கு ஐந்தாவது அணியாக தகுதிபெற்றது.