கிரிக்கெட் விளையாட்டில் உலகின் கத்துகுட்டி அணி என கருதப்படும் ஸ்காட்லாந்து அணி சமீப காலமாக இவ்விளையாட்டில் எதிரணிக்கு சவால்விடும் வகையில் விளையாடி வருகிறது.
இதன் விளைவாக அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது ஸ்காட்லாந்து அணி. இந்நிலையில் இத்தொடருக்கு முன்பாக ஸ்காட்லாந்து அணி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் ஒருநாள், டி20 தொடர்களை நடத்த திட்டமிட்டிருந்தது.
அதன்படி அந்த அணி 2020 ஜூன் 10ஆம் தேதி முதல் நியூசிலாந்து அணியுடன் ஒரு ஒருநாள், ஒரு டி20 போட்டி கொண்ட தொடரை நடத்தவுள்ளது. இதில் ஜூன் 10ஆம் தேதி டி20 போட்டியும், ஜூன் 12ஆம் தேதி ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 20ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது.
இதுகுறித்து ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கஸ் மேக்கே, இந்தத் தொடர்களை நடத்துவதன் மூலம் ஸ்காட்லாந்து கிரிக்கெட் அடுத்த நிலைக்கு முன்னேறவுள்ளது. மேலும் இந்த போட்டிகளினால் ரசிகர்களின் ஆதரவும் எங்களுக்கு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஐபிஎல் வீரர்களின் ஏலத்தொகை வெளியீடு - உட்சபட்ச விலையை தொட்ட வீரர்கள்!