இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென தனி ரசிகர்களை வைத்திருப்பவர் ரஹானே. இவர் விளையாடும் ஒவ்வொரு ஷாட்டும் தனித்துவமாக இருக்கும். இவரால் அனைத்து விதமான ஃபார்மெட்டுகளிலும் விளையாட முடியும். ஆனாலும் இவருக்கு சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது.
அதிலும், இவர் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தபோதிலும், 30 இன்னிங்ஸ்களில் ஒரு சதம்கூட விளாசாமல் இருந்தார்.
இந்நிலையில், ஆன்டிகுவாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இவர் சதம் விளாசி கம்பேக் தந்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இது குறித்து அவர் கூறுகையில், "இரண்டு ஆண்டுகள் கழித்து சதம் விளாசியுள்ளேன் என்பது இப்போதுதான் எனக்கு தெரியவந்தது. இந்த சதம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானாது. எனது பேட்டிங்கில் நான் கடுமையாக பயிற்சி செய்துவருகிறேன். ஒவ்வொரு முறை பேட்டிங் பயிற்சியில் களமிறங்கும்போதும் ஆட்டத்தில் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பேன். அதுதவிர, சதம் விளாச வேண்டும், சாதனை படைக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்கமாட்டேன்" என்றார்.
அவர் கூறியதைப் போலவே அவருக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் அந்த சதம் ஸ்பெஷலானதுதான். வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான கடைசி டெஸ்ட்டிலும் இவரது பேட்டிங் இந்திய அணியின் வெற்றிக்கு துணையாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.