2008ஆம் ஆண்டு கோலகலமாக தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடர், சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, டெக்கான், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எட்டு அணிகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. இத்தொடரின் முதல் போட்டியில் சவுரவ் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டிராவிட் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் மோதினர்.
இதில் முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ராகுல் டிராவிட் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதனையடுத்து கேகேஆர் அணிக்காக கேப்டன் சவுரவ் கங்குலி, பிராண்டன் மெக்குலம் களமிறங்கினர். தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை 5.2 ஓவர்களிலேயே 61 ரன்களை சேர்த்து அதிரடியில் மிரட்டியது. பின்னர் கங்குலி பத்து ரன்களில் பெவிலியன் திரும்ப, மறுமுனையில் பந்துவீச்சாளர்களின் மீது துளியும் கருணை காட்டாமல் மெக்குலம் அதிரடியில் பின்னி எடுத்தார்.
இதன்மூலம் 16 ஓவரின் தொடக்கத்தில் சதமடித்து அரங்கத்தையே அதிரச்செய்தார். அதன் பிறகும் நிற்காமல் அடுத்த நான்கு ஓவர்களில் 56 ரன்களை விளாசி தனது 150 ரன்களையும் கடந்தார். இதனால் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 222 ரன்களை சேர்த்தது.