தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் தொடர்களைத் தொடர்ந்து டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயன் மோர்கன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டி காக் - பவுமா இணை தொடக்கம் கொடுத்தது. அதிரடியாக ஆடிய இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தபோது டி காக் 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இணைந்த வாண்டர் டூசன் - பவுமா இணை இங்கிலாந்து அணியின் பந்துவீச்சைச் சிதறடித்தது. இந்த இணையின் அதிரடியான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது.
இரண்டாவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்திருந்தபோது வாண்டர் டூசன் 31 ரன்களிலும் பவுமா 43 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் உயர்வது சிறிது நேரம் தடுக்கப்பட்டது. பின்னர் வந்த மில்லர் 16 ரன்களிலும் ஸ்மட்ஸ் 20 ரன்களிலும் பெலுக்வாயோ 18 ரன்களிலும் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் - பட்லர் இணை தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இதில் பட்லர் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த பெயர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்து ஜேசன் ராய் அதிரடியில் அசத்தினார். இதனால் 8 ஓவர்களில் இங்கிலாந்து அணி 87 ரன்களை எடுத்தது. ஜேசன் ராய் 22 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார்.