2011ஆம் ஆண்டில் மும்பையில் நடந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின.
இதில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை தொடரை வென்றது.
இந்த நிலையில் இந்தப் போட்டி மேட்ச் ஃபிக்ஸிங் செய்யப்பட்டதாக அப்போதைய இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குற்றஞ்சாட்டினார்.
இதற்கு அப்போதைய இலங்கை அணியின் கேப்டன் சங்ககரா, ஜெயவர்தனே ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தச் சூதாட்ட புகார் தொடர்பாக தனிநபர் சிறப்பு குழு விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் தேர்வுக்குழுத் தலைவருமான அரவிந்த டி சில்வாவிடம் சிறப்புக் குழு ஆறு மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளது.
அவரைத் தொடர்ந்து, இலங்கை அணியின் தொடக்க வீரரான உபுல் தரங்காவும் இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அப்போதைய இலங்கை அணியின் கேப்டன் சங்ககராவிற்கு சிறப்புக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.