இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.
இந்த சூழலில் இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனாக இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. சாம் பில்லிங்ஸ் கடைசியாக இந்தாண்டு மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்றார். அதன்பின் அவருக்கு காயம் ஏற்பட்டதால் பில்லிங்ஸ் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முடியாமல் போனது.
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சாம் பில்லிங்ஸ் 21 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 314 ரன்களை எடுத்துள்ளார். இவர் ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார்.
இந்த சூழலில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடருக்குப்பின் நியூசிலாந்து சென்று விளையாடுகிறது. இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் பெரும்பாலும் இளம் வீரர்களே இடம்பிடித்துள்ளனர். எனவே அணியை வழிநடத்த கேப்டன் இயான் மார்க்கனிடம் பயிற்சிபெறுவதற்காக சாம் பில்லிங்ஸிற்கு துணைக் கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த புதிய வாய்ப்பு ஒரு அங்கீகாரத்தையும் மிகப்பெரிய கௌரவத்தையும் தனக்கு அளிப்பதாக சாம் பில்லிங்ஸ் தெரிவித்துள்ளார்.