கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக, இந்தியாவில் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 19 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்காகவும், உணவின்றி இருக்கும் ஏழைகளுக்காகவும் பல்வேறு பிரபலங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
அந்தவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி ஆகியோர் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். இதனையடுத்து நேற்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, புனோவிலுள்ள ஒரு தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கியதாக இணையத்தில் வைரலானது.
இதனை ஒருசிலர் பாராட்டினாலும், நெட்டிசன்களோ தோனியின் மொத்த சொத்து மதிப்பு வரை கணக்கிட்டு, அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இதனை ஒருசில ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டது. இந்நிலையில் தோனியின் மனைவி ஷாக்ஷி சிங் தோனி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ உணர்வுப்பூர்வமான நேரங்களில், தவறான செய்திகள் வெளியிடுவதை அனைத்து ஊடக நிறுவனங்களும் நிறுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். பொறுப்பான பத்திரிகைத்துறை எங்கே மறைந்துவிட்டது. இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:‘உலகக்கோப்பைத் தொடரில் தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு தேவை’