ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதற்காக நிவாரண உதவிகள் திரட்டும் பணிகளில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ’புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ்’ என்னும் கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ளனர். அதில் வசூல் செய்யப்படும் நிதி, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டி வார்னே, பாண்டிங் ஆகியோரின் தலைமையில் ஆடப்படவுள்ளது. பிக் பாஷ் தொடரின் இறுதிபோட்டியன்று இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட், ஜஸ்டின் லாங்கர், பிரெட் லீ, வாட்சன், பிளாக்வெல், கிளார்க், ஸ்டீவ் வாக், மெல் ஜோன்ஸ் ஆகியோரும் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.