இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதனிடையே, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களாலும், கிரிக்கெட்டின் கடவுள் என கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், தனக்கு அறிவுரை கூறிய ரசிகர் ஒருவரை சந்திக்க விரும்புவதாகவும் அவரை நெட்டிசன்கள் தேடித் தருமாறும் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டிருந்தார்.
தற்போது, அந்த நபர் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த குருபிரசாத் என்பது தெரியவந்துள்ளது. அவர் நமது ஈடிவி பாரத்திடம் சச்சினுக்கு ஆலோசனை வழங்கிய தருணங்களை நினைவுகூர்ந்துள்ளார். அதில், அவர் பேசியாதாவது, "2001 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போதுதான் இந்த நிகழ்வு நடந்தது. அப்போது நான் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி மூலம், ஓப்பந்தத்தில் சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் பாதுகாவலராகப் பணிபுரிந்தேன். கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் எனக்கு உள்ளது. வடசென்னையில் நான் அதிகமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளேன்.
சச்சினுக்கு ஆலோசனை வழங்கியதை நினைவுகூறும் ஓட்டல் ஊழியர்! சச்சினின் ஃபுட் ஒர்க் மிக அருமையாக இருக்கும். ஆனால், எல்போ கார்டை பயன்படுத்துவதால் அது அவரது பேட் ஸ்விங்கில் தடை ஏற்படுவதை நான் கவனித்தேன். இதை சச்சினிடம் சொல்ல வேண்டும் என்ற விருப்பம் நீண்ட நாட்களாகவே இருந்தாலும் அதற்கான வாய்ப்பு 2001இல்தான் கிடைத்தது.
சச்சின் அவரது ரூமிலிருந்து வெளியே வந்தபோது அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க நானும் மற்ற ஊழியர்களும் காத்துக்கொண்டிருந்தோம். அப்போது அவரிடமும் மற்ற இந்திய வீரர்களிடமிம் ஆட்டோகிராஃப் வாங்கிய பிறகு, சச்சின் லிஃப்டிலிருந்து கீழே தரை தளம் (Ground Floor) செல்லும் போதுதான் எல்போ கார்ட் குறித்து அவரிடம் ஆலோசிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு நிமிடம்தான் இருந்திருக்கும் அந்த உரையாடல்.
அப்போது, எல்போ கார்டை பயன்படுத்துவதால் உங்களது பேட்டிங்கில் ஏற்படும் தவறை சூட்டிக்காட்டினேன். இதைக் கேட்டவுடன் சச்சின் ஆச்சரியமானார். இதை எப்படி கவனித்தீர்கள் என்று கேட்டதற்கு, நான் உங்களது தீவிர ரசிகன். நான் உங்கள் பேட்டிங்கை 6 முதல் 7 முறை திரும்ப திரும்பப் பார்த்ததால், இதை கவனித்தேன் என்றேன். இதை அவர் உடனே எடுத்துக்கொண்டு தனது எல்போ கார்டை சரிசெய்துகொள்வதாகத் தெரிவித்தார். இந்நிகழ்வு நடந்து 18 ஆண்டுகள் கடந்த பின்னரும், சச்சின் இதை நினைவில் வைத்திருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது" என்றார்.