மொனாகோவைச் சேர்ந்த லாரஸ் அறக்கட்டளை 2000ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை கெளரவிக்கும் வகையில் லாரஸ் விருதுகளை வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் 20ஆம் ஆண்டு விழாவையொட்டி 2020ஆம் ஆண்டுக்கான லாரஸ் விருதுகளை பிப்ரவரி 17ஆம் தேதி வழங்குவதாக அறிவித்திருந்தது. இதையடுத்து, பிப்ரவரி 16ஆம் தேதி வரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அளிக்கும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையிலேயே விளையாட்டுத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் இவ்விருதின் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.
அந்தவகையில்1989 முதல் 2013 வரை 22 யார்ட்ஸுக்குள் 24 ஆண்டுகளில் தனது சிறப்பான பேட்டிங்கால் இந்திய ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத தருணங்களைத் தந்தவர் இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில், 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதும் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களது கனவு மட்டுமின்றி சச்சினின் கனவும் நனவானது. இதனால், கோலி, யூசஃப் பதான், ரெய்னா உள்ளிட்ட சக இந்திய வீரர்கள் தங்களது தோளில் சச்சினை சுமந்து மைதானத்தை வலம் வந்தனர். சச்சினுக்கு மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய செய்த இந்த தருணத்திற்காக அவரது பெயர் லாரஸ் விருதில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெர்லினில் நடைபெற்ற லாரஸ் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழாவில், 20 ஆண்டுகளில் விளையாட்டின் சிறந்த தருணத்திற்கான விருதினை (Laureus Best Sporting Moment) ‘கிரிக்கெட்டின் கடவுள்’ என அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வென்று புதிய சாதனையை படைத்துள்ளார்.