இந்தியாவின் சச்சின், வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா ஆகிய இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்துக் காலகட்டங்களிலும் தலைசிறந்த வீரர்களாக கொண்டாடப்படுவார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருவரும் கோலோச்சிய காலம்முதல் இன்றுவரை இவ்விருவருக்கிடையே மிகப்பெரிய ஒப்பிடுதல் இருந்துவருகிறது.
இந்த நிலையில், பிரையன் லாரா தனது மகன் வலது கையில் பிளாஸ்டிக் பேட்டுடன் கிரிக்கெட் விளையாடும் காணொலியை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
அந்தக் காணொலியில், அவன் பேட்டை பிடிக்கும் விதத்தைப் பாருங்கள், அவன் இடது கை பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறான் என்று எனக்குத் தோன்றுகிறது என லாரா பதிவிட்டிருந்தார்.
இந்தக் காணொலியைப் பார்த்த சச்சின் டெண்டுல்கர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இதேபோன்று பேட்டிங் பிடிக்கும் ஒரு சிறு குழந்தையை எனக்குத் தெரியும். அவர் பின்நாளில் சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வளவு மோசமான வீரராக வலம்வரவில்லை" எனக் கமண்ட் செய்து (லாராவின் பதிவிற்கு)தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை இணைத்துள்ளார்.
சச்சினின் பதிவிற்கு பதிலளித்த லாரா, "அந்தச் சிறு குழந்தை உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொண்டது என்பதை நான் கண்டுள்ளேன். என் மகன் பேட்டிங் பிடிக்கும்விதத்தில் நான் தலையிட விரும்பவில்லை. ஆலோசனைக்கு நன்றிகள்" என்றார். மேலும் #rightvsleft #legend #mostruns #recordsmen என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டிருந்தார்.
சச்சின் பதிவிற்கு லாரா பதில் பின்னர் சச்சின், லாராவின் மகனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவன் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான தனது தந்தையிடமிருந்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொள்வார் எனத் தெரிவித்தார். லாரா மகன் பேட்டிங் பிடிக்கும் விதத்தைப் பார்த்து தனது சிறு குழந்தைப் பருவ புகைப்படத்தை இணைத்த சச்சினின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: டெண்டுல்கர், லாராதான் எனது காலத்தின் சிறந்த பேட்ஸ்மேன்கள் - வார்னே