இலங்கை கிரிக்கெட் அணியின் சங்கக்காரா, ஜெயவர்தனே ஆகிய இருவரின் அதீத திறமையால் கொண்டாடப்பட மறக்கப்பட்டவர் இலங்கை அணியின் முன்னாள் தொடக்க வீரர் திலகரத்னே தில்ஷன். இவரின் அதிரடியான ஆட்டத்தால் பல போட்டிகளில் இலங்கை அணி வென்றுள்ளது. இவர் தற்போது தனது ஆல் டைம் சிறந்த ஒருநாள் லெவன் அணியை அறிவித்துள்ளார்.
அதில் 1996ஆம் உலகக்கோப்பையின்போது தொடக்க வீரருக்கான இலக்கணத்தை மாற்றிய இலங்கை அணியின் ஜாம்பவான் வீரர் ஜெயசூர்யாவையும், இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் இடம்பிடித்த ஒரே இந்தியர் சச்சின் மட்டுமே.
மூன்றாவது இடத்திற்கு வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாராவையும், நான்காவது இடத்திற்கு மஹிலா ஜெயவர்தனேவையும் தேர்வு செய்துள்ளார். ஐந்தாவது இடத்திற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு கேப்டனாகவும் ரிக்கி பாண்டிங்கையே நியமித்துள்ளார்.
ஆறாவது இடத்திற்கு தென் ஆப்பிரிக்கா ஆல் ரவுண்டர் காலிசையும், ஏழாவது இடத்திற்கு ஏபி டி வில்லியர்சையும் தேர்வு செய்துள்ளார். 8ஆவது இடத்திற்கு பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமையும், 9ஆவது இடத்திற்கு வெஸ்ட் இண்டீசின் வால்ஷையும், 10ஆவது இடத்திற்கு முரளிதரனையும், கடைசி இடத்திற்கு வார்னேவையும் தேர்வு செய்துள்ளார். 12ஆவது வீரராக ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத்தை தேர்வு செய்துள்ளார்.
இதையும் படிங்க:மங்கூஸ் பேட்டை பயன்படுத்த வேண்டாம் - ஹெய்டனுக்கு அறிவுரை கூறிய தோனி!