இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரர் சச்சின். இவரை பார்த்துதான் பெரும்பாலான இந்திய வீரர்கள் கிரிக்கெட் விளையாட தொடங்கினார்கள். ஆடுகளத்தின் 22 யார்ட்ஸுக்குள் 24 வருடங்களாக பயணப்பட்ட இவர், சதத்தில் சதம், 200 டெஸ்ட் போட்டிகள், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் போன்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
ஹால் ஆஃப் பேம் விருது பெற்ற சச்சின் சர்வதேச கிரிக்கெட்டிற்கே பெருமையை சேர்த்த சச்சினை கௌரவப்படுத்தும் விதமாக, ஐசிசி இன்று அவருக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருது அளித்துள்ளது. இந்த விருதை பெற்ற ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து, இது குறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
’ஐசிசியின் ஹால் ஆஃப் பேம் லிஸ்டில் இணைந்திருப்பதை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். நான் இந்த அளவிற்கு பெரிய வீரரான மாறியதற்கு ஏராளமான மக்கள் பங்களிப்பு செலுத்தியுள்ளனர். இந்த நேரத்தில், எனது குடும்பத்தினர், நண்பர்கள், உலகம் முழுவதும் என்னை நேசிக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டிருந்தார்.
இதனிடையே, ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இது குறித்து அவர் கூறுகையில், "என் அப்பாவைதான் நான் ஹிரோவாக நினைக்கிறேன். எந்த விருதையும் நான் ஒப்பிட்டு பார்க்கமாட்டேன். நான் பெற்ற அனைத்து விருதும் முக்கியமானது. 2011 உலகக்கோப்பையை வென்றதுதான் என் வாழ்நாளில் மறக்கமுடியாத தருணம்" என்றார். ஐசிசியின் இந்த உயரிய விருது பெற்ற சச்சினுக்கு வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்துவருகின்றனர்.