இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ், பும்ரா வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
ஆனால் நடுவர் அதற்கு அவுட் தரவில்லை. இதனால் இந்திய அணி டி.ஆர்.எஸ். முறைக்குச் சென்றது. ஆனால் அதில் ‘அம்பையர்ஸ் கால்’ எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கள நடுவரின் தீர்ப்புச் சரியானது எனத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் வாயிலாக ஐசிசிக்கு கோரிக்கைவைத்துள்ளார்.
இது குறித்த சச்சினின் ட்விட்டர் பதிவில், “போட்டியின்போது வீரர்கள் டி.ஆர்.எஸ். முறையை மேற்கொள்வது, நடுவர்களின் முடிவில் அவர்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்பதால்தான். அதனால் டி.ஆர்.எஸ். முறையில் உள்ள குழப்பங்களை ஐசிசி முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக 'அம்பையர்ஸ் கால்' முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று ஐசிசியை டேக்செய்து பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்துள்ளது. அந்த அணியின் கேமரூன் கிரீன் - பாட் கம்மின்ஸ் நாளை நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளனர்.
இதையும் படிங்க:ரொனால்டினோ கைது முதல் மாரடோனா மறைவு வரை...2020ஆம் ஆண்டின் கால்பந்தாட்ட நிகழ்வுகள் ஓர் பார்வை!