கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் தனது ரசிகர்களை எப்போதும் சந்தித்துவருபவர். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் நாளை நடக்கவுள்ள ஒருநாள் போட்டியைக் காண சென்னை வந்துள்ள சச்சின் டெண்டுல்கர் தனக்கு அறிவுரை கூறிய ரசிகர் ஒருவரை சந்திக்க விரும்புவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
அதனோடு சேர்த்து வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். அந்த வீடியோவில், ''சென்னை தாஜ் ஹோட்டலில் தங்கியபோது, எனது அறைக்கு ஊழியர் ஒருவர் காபி கொடுக்க வந்தபோது, உங்கள் பேட்டிங் குறித்து ஒரு அறிவுரை வழங்கலாமா எனக் கேட்டார். நான் சொல்லுங்கள் என்றேன். அப்போது, சார் நீங்கள் எப்போதெல்லாம் எல்போ கார்டை பயன்படுத்துகிறீர்களோ, அப்போது எல்லாம் உங்களது பேட் ஸ்விங்கில் (bat swing) வித்தியாசம் ஏற்படுகிறது.
நான் உங்களது தீவிர ரசிகன். நான் உங்கள் பேட்டிங்கை 6 முதல் 7 முறை திரும்ப திரும்பப் பார்த்ததால், எனக்கு தோன்றியதைக் கூறினேன் என்றார்.