தென் அப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நேற்று முந்தினம் தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் (பாக்ஸிங் டே) டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் சண்டிமால், தனஞ்செய, ஷானகா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களை எடுத்தது.
இதையடுத்து நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கும் டீன் எல்கர் - மார்க்ரம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
அதன்பின் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்க்ரம் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வேண்டர் டௌசனும் 15 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த டீன் எல்கர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 95 ரன்களில் ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.