ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடர் முடிந்த கையோடு இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது.
இத்தொடருக்காக இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, கே.எல்.ராகுலுக்கு துணைக்கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிசிசிஐ மீதும், வீரர்கள் தேர்வு குழு மீது பல்வேறு விமர்சனங்கள் எழத்தொடங்கியது.
மேலும் ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ரோஹித் சர்மா கடந்த சில போட்டிகளாக அணியில் இடம்பெறாமல் உள்ளார். அவரது காயத்தை காரணம் காட்டியே பிசிசிஐ-யும் ஆஸ்திரேலிய தொடரிலிருந்து நீக்கியதாக விளக்கமளித்திருந்தது.
இந்நிலையில் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக உள்ளார் என்பது போல் மும்பை இந்தியன்ஸ் அணி அவர் பயிற்சி செய்யும் காணொலியை வெளியிட்டு வருகிறது. இதனால் வேறு வழியின்றி பிசிசிஐ, தற்போது ரோஹித் சர்மாவை உடற்தகுதித் தேர்வுக்கு உட்படுத்த ஆயத்தமாகி விட்டது.
இதுகுறித்து பிசிசிஐ செயல்பாட்டு குழு கூறுகையில், “காலில் ஏற்பாட்ட காயம் காரணமாக ரோஹித் சர்மாவிற்கு, பிசிசிஐ மருத்துவர் குழு நாளை (நவ.1) உடற்தகுதி தேர்வினை ஏற்பாடு செய்துள்ளது. இத்தேர்வின் மூலம் ரோஹித் முழு உடற்தகுதியுடன் உள்ளாரா? அல்லது அவரது காயம் குணமடைய சிறிது காலம் தேவைப்படுமா? என்பது தெரியவரும். இத்தேர்வு முடிவின் அடிப்படையிலேயே அவர் ஆஸ்திரேலிய தொடருக்கு தொடருக்கு தேர்வு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
இத்தகுதி தேர்வில் ரோஹித் சர்மா தேர்ச்சியடையும் பட்சத்தில், அவர் நேரடியாக ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இபிஎல் 2020: கிரிஸ்டல் பேலஸை வீழ்த்தி வுல்ஃப்ஸ் அபார வெற்றி!