நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி இப்போட்டியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இந்தத் தொடரை 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தது.
இதனிடையே இப்போட்டியில் 41 பந்துகளில், தலா மூன்று பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 61 ரன்கள் எடுத்திருந்த போது ரோஹித் சர்மாவின் பின்னங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் பாதியிலேயே பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, இந்திய பந்துவீச்சின்போது அவருக்குப் பதிலாக கே.எல். ராகுல் கேப்டனாகச் செயல்பட்டார். டி20 தொடரையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் ஹாமில்டனில் தொடங்கவுள்ளது.