இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் மூலம், தான் ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளிலும் தலை சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன் என்பதை இந்திய வீரர் ரோகித் சர்மா நிரூபித்திக் காட்டியுள்ளார்.
ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அவர் ஒருநாள் போட்டியைப் போல விளையாடி ரன்களைக் குவித்தார். தொடர்ந்து பேட்டிங்கில் வெளுத்துக்கட்டிய அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார்.
255 பந்துகளில் 28 பவுண்டரிகள், ஆறு சிக்சர்கள் என மொத்தம் 212 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம், ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமை பெற்றார். இவருக்கு முன்னதாக சச்சின், சேவாக், கெயில் ஆகியோர் இச்சாதனை படைத்தனர். இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இச்சாதனைப் படைத்த நான்கு பேர்களும் தொடக்க வீரர்கள்தான்.
இதையும் படிங்க:#INDvSA: சச்சினுக்குப் அப்புறம் உமேஷ் தான்... சிக்ஸரில் புதிய சாதனை!
ரோகித் சர்மாவின் உதவியால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 497 ரன்களைக் குவித்தது. இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் ஆட்டநாள் முடிவில், இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஒன்பது ரன்களை எடுத்துள்ளது. இந்தத் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா இதுவரை, ஒரு இரட்டை சதம், இரண்டு சதம் என 529 ரன்களை குவித்துள்ளார்.