தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 20, 2020, 11:46 AM IST

ETV Bharat / sports

ஆஸிக்கு எதிராக சதம்: விராட் சாதனையை சமன்செய்த ஹிட்மேன்

இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதன்மூலம், விராட் கோலியின் சாதனையை சமன்செய்துள்ளார்.

Rohit sharma equals kohli record
Rohit sharma equals kohli record

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றிருந்த நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது, கடைசி ஒருநாள் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

தொடரை வென்ற இந்தியா:

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 131, லபுசானே 54 ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 286 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி நிலையான தொடக்கத்தை அளித்தது. பின்னர் கே.எல். ராகுல் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா - கேப்டன் கோலி ஆகியோர் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் 119 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கோலியும் தன் பங்கிற்கு 89 ரன்கள் விளாசி அவுட்டானார். இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ரோஹித் சர்மா - விராட் கோலி இணை

இப்போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ரோஹித் சர்மா, ஒருநாள் தனது 29ஆவது சதத்தை நிறைவுசெய்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் பல்வேறு சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். அதன்படி ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசிய வீரர், மிகக் குறைந்த இன்னிங்சில் 29 சதங்களை விளாசிய வீரர், ஆஸிக்கு எதிராக அதிக சதம் விளாசிய இந்தியர் உள்ளிட்ட சாதனைப் பட்டியலில் ரோஹித் இடம்பிடித்துள்ளார்.

ரோஹித் படைத்த சாதனைகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா நான்காம் இடம்பிடித்துள்ளர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்கள்

வீரர் நாடு சதங்கள்
சச்சின் இந்தியா 49
விராட் கோலி இந்தியா 43
ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியா 30
ரோஹித் சர்மா இந்தியா 29
சனத் ஜெயசூர்யா இலங்கை

28

கோலியின் சாதனையை சமன்செய்த ரோஹித்

ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எட்டாவது முறையாக அடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக ஒருநாள் சதம் விளாசி இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் (9 சதம்), கேப்டன் விராட் கோலி (8 சதம்) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். நேற்றைய சதத்தின்மூலம் தற்போது ரோஹித் சர்மா கோலியின் சாதனையை சமன்செய்திருக்கிறார்.

இது தவிர இப்போட்டியில் ரோஹித் சர்மா நான்கு ரன்களை எடுத்தபோது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 9,000 ரன்களைக் கடந்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் வேகமாக ஒன்பதாயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனைப் பட்டியலில் அவர் மூன்றாம் இடம்பிடித்தார்.

ரோஹித், 217ஆவது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்து கங்குலி (228 இன்னிங்ஸ்), சச்சின் (235 இன்னிங்ஸ்), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (239 இன்னிங்ஸ்) ஆகியோரை பின்னுக்குத் தள்ளினார். இப்பட்டியலில் விராட் கோலி (194 இன்னிங்ஸ்) முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் (208 இன்னிங்ஸ்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும், 9 ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர்களின் வரிசையில் முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், எம்.எஸ். தோனி, விராட் கோலி ஆகியோருக்கு அடுத்தபடியாக ஏழாவது வீரராக ரோஹித் நுழைந்துள்ளார்.

இதையும் படிங்க: 40 விநாடிகளிலேயே வெற்றிபெற்று கம்பேக் தந்த மெக்கிரிகோர்!

ABOUT THE AUTHOR

...view details