கிரிக்கெட் ரசிகர்களால் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, நடப்பு ஆண்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான ஃபார்மெட்டுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
இந்நிலையில், 316 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரரான ரோஹித் சர்மா 63 பந்துகளில் எட்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம், ஒரே ஆண்டில் மூன்று விதமான போட்டிகளையும் சேர்த்து அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் ஜெயசூர்யாவின் 22 ஆண்டு கால சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். அவர் இப்போட்டியில் ஒன்பது ரன்கள் எடுத்தபோது இச்சாதனையை எட்டினார்.