கரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்களது நேரத்தைக் கழித்துவருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், பந்தைத் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருப்பது போன்ற காணொலி ஒன்றை வெளியிட்டு, இதனை ஹர்பஜன் சிங், சச்சின், ரோஹித் சர்மா ஆகியோர் சவாலாக ஏற்று செய்துமுடிக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
அதன்படி, அவரின் சவாலை ஏற்ற சச்சின், தனது கண்களை கறுப்புத் துணியால் கட்டி, பந்தைத் தொடர்ச்சியாக அடித்து, அதனை யுவராஜ் சிங்கால் செய்ய முடியுமா என சவால் விடுத்துள்ளார். மேலும் ஹர்பஜன் சிங்கும், யுவராஜின் சவாலை நிறைவுசெய்து, கங்குலி, ஷிகர் தவான் ஆகியோர் இச்சவாலை நிறைவு செய்யவேண்டுமென தெரிவித்தார்.
தற்போது ரோஹித் சர்மாவும் சவாலை ஏற்று தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்காணொலியில் அவர் பேட்டின் கைப்பிடி பகுதியில் பந்தைத் தொடர்ச்சியாக அடித்து நிறைவு செய்துள்ளார். மேலும் இதேபோல செய்ய வேண்டும் என ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், அஜிங்கியா ரஹானே ஆகியோருக்கும் சவால் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:மனைவிக்காக புல்லாங்குழல் இசைக் கலைஞராக மாறிய தவான்!