இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற டிச.17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா காயமடைந்ததால், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரிலிருந்து விலக்கப்பட்டார்.
பின்னர் விராட் கோலி, தனது குழந்தை பிறப்பு காரணமாக கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடுப்பு எடுக்க உள்ளதால், ரோஹித் சர்மா இந்தியாவின் டெஸ்ட் அணியில் மட்டும் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவரது காயம் குறித்து சந்தேகம் எழுந்ததால், பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ) ரோஹித் சர்மா பயிற்சி எடுக்க வேண்டுமென பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது.
பெங்களூரு சென்று பயிற்சி மேற்கொண்ட ரோஹித் சர்மா, அனைத்து விதமான தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி பயிற்சியை முடித்துள்ள ரோஹித் சர்மா, வருகிற டிசம்பர் 14ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்லவுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.