இந்தியா - இலங்கை மோதல்:
மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலக சாலை பாதுகாப்பு டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இலங்கை லெஜண்ட்ஸ் 138 ரன்கள் சேர்ப்பு:
இலங்கை வீரர் ரொமேஷ் கலுவிதரானா அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கேப்டன் தில்ஷான், கமரா கபுகெதரா ஆகியோர் தலா 23 ரன்கள் அடித்தனர். இந்திய அணி சார்பில் முனாப் படேல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சச்சின்,சேவாக்,யுவராஜ் சொதப்பல்:
மூன்று ரன்களில் ரன் அவுட்டான சேவாக் இதைத்தொடர்ந்து, 139 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. கேப்டனும் தொடக்க வீரருமான சச்சின் ரன் ஏதும் அடிக்காமல் சமிந்தா வாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சேவாக் மூன்று ரன்களில் ரன் அவுட்டானார்.
நான்காவது வரிசையில் களமிறங்கிய யுவராஜ் சிங் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்ப, இந்திய அணி 4.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 19 ரன்களை எடுத்திருந்தது. இந்த நிலையில், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சய் பங்கர் 18 ரன்களிலும், முகமது கைஃப் 46 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால், இந்திய அணி 14.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்டை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால், இப்போட்டியில் இலங்கை அணியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆட்டத்தை மாற்றிய இர்பான் பதான்:
ஆனால், ஆறாவது வரிசையில் களமிறங்கிய இர்பான் பதான், தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசினார். இதன் பலனாக, இந்திய அணி 18.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்டை இழந்து 139 ரன்களை எட்டி வெற்றிபெற்றது. இர்பான் பதான் 31 பந்துகளில் ஆறு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் உட்பட 57 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனிடையே, இப்போட்டியில் ஜாகிர் கான் பந்துவீச்சில் கமரா கபுகெதரா அடித்த பந்தை ஸ்கோயர் லெக் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த முகமது கைஃப் டைவ் அடித்து சிறப்பாக பிடித்தார். இவரது இந்த ஃபீல்டிங்கும், இர்பான் பதானின் அதிரடி ஆட்டத்தையும் பார்க்கும்போது வயசானாலும் இவர்களது ஆட்டத்திறன் இன்னும் மாறவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:'ஃபினிஷிங்கில் தோனி தான் மாஸ்டர்': ஜஸ்டின் லாங்கர்