சீனாவில் பரவத் தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளை கரோனா வைரஸ் சிறைப்பிடித்துள்ளது. இதுவரை உலகளவில் கோவிட் 19 தொற்றால் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா, நேபாளம், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இதனால், வெறிச்சோடி கிடக்கும் சாலைகளில் வன விலங்குகள் சுதந்திரமாக நடமாடிவரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில்கூட, அழிந்துவிட்டதாக கூறப்பட்ட வனவிலங்கு ஒன்று கேரளாவின் சாலையோரத்தில் உலா வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வகையில், நேபாளத்தில் உள்ள சிட்வான் தேசிய பூங்காவிலிருந்து காண்டாமிருகம் ஒன்று வெளியே வந்து ஊருக்குள் சுதந்திரமாக நடமாடியுள்ளது. சிட்வான் தேசிய பூங்காவிலிருந்த எடுக்கப்பட்ட இந்த வீடியோவை இந்திய வனத்துறை அலுவலர் பர்வின் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ”சட்டத்தை தன்கையில் எடுத்துக்கொண்ட இந்த காண்டாமிருகம் ஊருக்குள் நுழைந்து ஆய்வு மேற்கொண்டது. ஊரடங்கு இல்லாத நேரத்திலும், காண்டாமிருகம் காட்டுக்குள் இருந்து அதிகமாக வெளியே வந்துள்ளதை பலமுறை பார்த்திருப்போம். ஆனால் இம்முறை ஊரடங்கு உத்தரவால் மக்கள் தங்களது வீட்டில் இருக்கிறார்களா என்பதை சோதனை மேற்கொள்ளவே இந்த காண்டாமிருகம் வெளியே வந்துள்ளது” என நய்யாண்டித் தனமாக பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பொதுமக்கள் பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துவந்தனர். இதனிடையே, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இவரது பதவிற்கு சிரிக்கும் ஸ்மைலியை பதிவிட்டு பதில் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, பீட்டர்சனின் பதவிற்கு பர்வின் கஸ்வான், கிரிக்கெட் களத்திலிருந்த உங்களை தற்போது காண்டாமிருகத்தின் பாதுகாவலராக பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக நீங்கள் தொடர்ந்து இந்தியாவுக்கு வருகை தாருங்கள் என பதிலளித்திருந்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பீட்டர்சன், காண்டாமிருகத்தின் பாதுகாப்பு குறித்த ஆவணப் படத்தை எடுத்துவருகிறார். அதற்காக அவர் அசாம் மாநிலத்தின் காஸிரங்கா தேசியப் பூங்காவில் முகாமிட்டு படபிடிப்பையும் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அசாமில் முகாமிட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் !