கிரிக்கெட் ரசிகர்களால் மிஸ்டர் 360, சூப்பர்மேன் என அழைக்கப்படுவர் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸ். தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர் 2018 மே 23இல் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெற்றார்.
இவர் ஓய்வுபெற்றபின் தென் ஆப்பிரிக்க அணியின் நிலைமை தலைகீழாக மாறியது. அதுவரை சிறப்பாக விளையாடிவந்த தென் ஆப்பிரிக்க அணி படுமோசமாக விளையாடத் தொடங்கியது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடர்தான். அந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய ஒன்பது போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றிபெற்றது.
இதைத்தொடர்ந்து, சரிவை நோக்கிச் சென்றிருந்த தென் ஆப்பிரிக்க அணியை மீட்கும்வகையில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக, முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்தை இடைக்கால இயக்குநராகவும், மார்க் பவுச்சரை அணியின் பயிற்சியாளராகவும், ஜாக் காலிஸை பேட்டிங் ஆலோசகராகவும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நியமித்தது.