இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2011 உலகக்கோப்பை தொடர் என்றுமே மறக்க முடியாத ஸ்பேஷலான தொடராகும். கபில்தேவுக்கு பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரை வென்று சச்சின் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கனவையும் நனவாக்கியது.
இதுமட்டுமின்றி, சொந்த மண்ணில் தொடரை நடத்தும் நாடு உலகக்கோப்பையை வெல்ல முடியும் என்பதையும் இந்திய அணி மற்ற அணிகளுக்கு எடுத்துரைத்தது. சேவாக்கின் முதல் பால் பவுண்டரி, சச்சின் கடைசி உலகக்கோப்பை, யுவியின் ஆல்ரவுண்ட் ஆட்டம், கம்பிரின் போராட்டம், தோனியின் ஃபினிஷிங் என இந்தத் தொடர் முழுவதும் இந்திய ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த அழகிய தருணங்களை மீண்டும் நினைவுப்படுத்தும் விதமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் களமிறங்கியுள்ளது. கோவிட்-19 வைரஸால் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், விளையாட்டுப் போட்டிகளை மிஸ் செய்திருக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் சேனல்கள் பழைய போட்டிகளை மறு ஒளிப்பரப்பு செய்கிறது.
அந்தவகையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் 2011 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் அரையிறுதி, இறுதிப்போட்டி மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளன. அதன்படி மார்ச் 30, இந்தியா-பாகிஸ்தானுடான அரையிறுதிப் போட்டியும், ஏப்ரல் 2, இந்தியா-இலங்கையுடனான இறுதிப்போட்டியும் மதியம் இரண்டு மணிக்கு மறு ஒளிபரப்பாகவுள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:23 ஆண்டுகால ஆஸி. பகைக்கு முற்றுப்புள்ளி - இந்திய ரசிகர்கள் மறக்க முடியாத மகத்தான நாள்!