தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரிஷப் பந்த் மீண்டும் அதையே செய்தால்... எச்சரிக்கை விடுத்த ரவி சாஸ்திரி! - ரிஷப் பண்டுக்கு ரவிசாஸ்திரி எச்சரிக்கை

ரிஷப் பந்த் மீண்டும் தேவையில்லாத ஷாட்களை ஆடி அவுட்டாகிக் கொண்டிருந்தால், அணியில் விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிடும் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார்.

Ravi shastri warns Rishab pant

By

Published : Sep 16, 2019, 8:53 AM IST

2016ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இளம் வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 75 ரன்கள் எடுத்ததன் மூலம், அவர் இனங்காணப்பட்டார்.

இதனையடுத்து, அதே ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணி ரிஷப் பந்த்தை ஏலத்தில் எடுத்தது. அணியில் பல இளம் வீரர்கள் இருந்தாலும், களத்தில் இறங்கிய நிமிடமே அதிரடி காட்டும் ரிஷப் பந்த்தின் ஆட்டத் திறமையினால் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராகக் களமிறக்கப்பட்டார்.

ரிஷப் பந்த் ஐபிஎல் போட்டிகளிலும் தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்துக் காட்டினார். அனைத்து பந்துவீச்சாளர்களையும் பயமில்லாமல் எதிர்கொண்டு ஆடும் அணுகுமுறையை ரிஷப் பந்த் கையாண்டததால், இளம் வயதிலேயே இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பையும் பெற்றார்.

ரிஷப் பந்த்

களத்தில் நின்றுவிட்டால் தாறுமாறாக ஆடும் ரிஷப் பந்த், சில நேரங்களில் தேவையில்லாத ஷாட்களை ஆடி, ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழந்து விடுவார். இதுவே அவரின் மிகப்பெரிய மைனஸ். சமீபத்தில், ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், முதலில் நிதானமாக ரிஷப் பந்த் ஆடினாலும், தேவையில்லாமல் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு இந்தியாவை இக்கட்டான நிலைக்குத் தள்ளினார்.

அந்த இடத்தில் அம்மாதிரியான ஷாட்களை ஆட என்ன அவசியமிருக்கிறது என்று தெரியவில்லை. அதேபோல, வெஸ்ட் இண்டீஸ் உடனான டி20 போட்டியில் வந்த் முதல் பந்திலேயே தவறான ஷாட் அடித்து டக் அவுட் ஆகியிருப்பார். ரிஷப் பந்த்தின் இந்த ஆட்டப்போக்கை சமூக வலைதளத்தில் விமர்சித்தனர்.

ரிஷப் பந்த்தின் ஆட்டம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும் கேப்டன் கோலியையும் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரிஷப் பந்த் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்துக் கூறியுள்ளார்.

ரிஷப் பந்த்

அதில் அவர், “ரிஷப் பந்த் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தத் தவறை அவர் மீண்டும் செய்தால், அணியில் ஆடும் வாய்ப்பை இழக்க நேரிடலாம்” என எச்சரித்துள்ளார்.

ரிஷப் பந்த்

மேலும் அவர், “நீங்கள் அணியை வீழ்த்துவதால், உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இக்கட்டான நிலையில் அணி இருக்கும்போது, அதிக நேரம் களத்தில் நின்று பொறுப்பாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ரிஷப் பந்த்தின் ஆட்டத் தன்மையை நாங்கள் மாற்றச் சொல்லவில்லை. கேப்டன் கோலி கூறுவதுபோல, ஆட்டத்தின் போக்கையறிந்து விழிப்புணர்வுடன் தேவையான ஷாட்களை மட்டும் விளையாடி விக்கெட்டை இழக்காமல் ஆட வேண்டும்.

கோலி, ரவி சாஸ்திரி

இதை மட்டும் அவர் புரிந்துகொண்டுவிட்டால் அவரை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது. அவருக்கு இதை புரிந்துகொள்ள சில ஆட்டங்கள் தேவைப்படலாம். இருப்பினும், ஐபிஎல் தொடர்களில் அவர் நிறைய கற்றுக் கொண்டிருப்பதால், அவரால் நிச்சயம் இதை செய்ய முடியும். ரிஷப் பந்த் இந்திய அணியில் தன்னை நிரூபிப்பதற்கான சரியான நேரம் இதுவாகும்” எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details