டெஸ்ட் , ஒருநாள், டி20 என மூன்று வித போட்டிகளிலும் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிவருகிறார். ஒருநாள் போட்டிகளில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் வேமகாக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை இவர் படைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த பத்தாண்டில் (2010 முதல் 2019) அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், அஸ்வின் 564 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 70 டெஸ்ட் போட்டிகளில் 364 விக்கெட்டுகளும், 111 ஒருநாள் போட்டிகளில் 154 விக்கெட்டுகளும், 46 டி20யில் 52 விக்கெட்டுகளையும் அவர் எடுத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற 2013 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.