டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இதுவரை 70 போட்டிகளில் ஆடி 362 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் சில ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
2017ஆம் ஆண்டில் வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக பங்கேற்று 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதையடுத்து 2019ஆம் ஆண்டில் நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக களமிறங்கி 34 விக்கெட்டுகளும், 339 ரன்களும் எடுத்து அபாயகர வீரராக வலம்வந்தார்.
இதையடுத்து இந்த ஆண்டில் யார்க்ஷைர் அணிக்காக களமிறங்கவுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''யார்க்ஷைர் அணிக்காக களமிறங்குவதற்கு ஆர்வமாக உள்ளேன். மிகவும் பாரம்பரியமான, கவுண்டி கிரிக்கெட்டில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட அணி யார்க்ஷைர். அந்த அணியில் திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனவே எனது தேவை நிச்சயம் சுழற்பந்துவீச்சை வலிமைப்படுத்துவதற்காக தான்.
யார்க்ஷைர் அணிக்காக முதல் வெளிநாட்டு வீரராக சச்சின் டெண்டுல்கர் ஆடினார். அவருடைய தடங்களைப் பின்பற்றி, யார்க்ஷைர் அணிக்கு ஆடப்போவது பெருமையாக உள்ளது'' என்றார்.