தற்போதைய இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்கிறார். ஆஃப் ஸ்பின்னரான இவர், தனது பந்துவீச்சில் பல வெரைட்டிகளை காட்டி டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறார். இந்த நிலையில், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றுவருகிறது.
இதில், முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 150 ரன்களுக்கு சுருண்டது. 38ஆவது ஓவரில் அஸ்வினின் அபாரமான சுழற்பந்துவீச்சினால் வங்கதேச அணியின் கேப்டன் மோமினுல் ஹாக் போல்டானார். அவரைத் தொடர்ந்து மஹமதுல்லாஹவும் அஸ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம், சொந்த மண்ணில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை ஜாம்பவான் முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இருவரும் இச்சாதனை படைக்க 42 டெஸ்ட் போட்டிகள் எடுத்துக்கொண்டனர். இருப்பினும் இன்னிங்ஸை பொருத்தவரையில், முரளிதரண்தான் முதலிடத்தில் உள்ளார். அவர் 71 டெஸ்ட் இன்னிங்ஸில் 250 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையில், அஸ்வின் 250 விக்கெட்டுகள் எடுக்க 81 இன்னிங்ஸுகளை எடுத்துக்கொண்டார்.