பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதும், அவர்கள் இளவயதிலேயே சர்வதேச போட்டிகளில் விளையாடுவதும் வழக்கமான ஒன்றுதான். அதேபோல் தான் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கானும் 17 வயதில் தன்னுடைய முதல் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். இவர் தன்னுடைய பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
கவனம் பெற்றது இவர் மட்டுமல்ல, இவரால் ஆப்கானிஸ்தான் அணியும்தான். ஐபிஎல்லில் களமிறங்கிய இவரின் பந்துக்கு அனைவரும் தங்களது பேட்டால் பதில் கூற முடியாமல் திணறினார்கள். இந்நிலையில், யாரும் எதிர்பாரா வண்ணம் ஆப்கானிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டனாக ரஷீத் கான் நியமிக்கப்பட்டார். இதனால், டெஸ்ட் போட்டியில் மிக குறைந்து வயதில் கேப்டனாக பதவியேற்றவர் என்ற சாதனையை பெற்றார்.
இந்த சாதனையை முறியடிக்க இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும். இதுமட்டுமல்லாமல், நடைபெற்றுக் கொண்டிருக்கும் வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரஷீத் கான் 51 ரன்களையும், 5 விக்கெட்டுகளையும் எடுத்து மற்றுமொரு உலக சாதனையையும் செய்துள்ளார்.