2019-20ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 9ஆம் தேதி தொடங்கியது. இதில் செளராஷ்டிரா அணியை எதிர்த்து பெங்கால் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற செளராஷ்டிரா அணி கேப்டன் உனாத்கட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
பின்னர் களமிறங்கிய செளராஷ்டிரா அணியில் அர்பித் வசவதா 106 ரன்களும், புஜாரா 66 ரன்களும் எடுக்க முதல் இன்னிங்ஸில் 425 ரன்கள் எடுத்தது. பெங்கால் அணியில் அக்ஷ்தீப் 4 விக்கெட்டுகளையும், ஷபாஷ் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பெங்கால் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் மூன்றாம் நாள் இறுதியில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் பெங்கால் அணி ஆமை வேகத்தில் ரன்கள் சேர்த்துவந்தது.
பெங்கால் வீரர் அக்ஷ்தீப் விக்கெட்டை சாதூர்யமாக எடுத்த கேப்டன் உனாத்கட் சிறப்பாக ஆடிவந்த சஹா 64 ரன்களுக்கும், மஜும்தார் 63 ரன்களுடனும் ஆட்டமிழக்க நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பெங்கால் அணி 354 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதையடுத்து இன்று நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் 425 ரன்களைக் கடந்துவிட வேண்டும் என பெங்கால் அணி வீரர்கள் போராடினர்.
ஆனால் இன்றைய ஆட்டம் தொடங்கிய 13 ஓவர்களிலேயே பெங்கால் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 161 ஓவர்கள் பேட்டிங் செய்த பெங்கால் அணி 381 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் செளராஷ்டிரா அணி 44 ரன்கள் முன்னிலைப் பெற்று, முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை உறுதி செய்தது.
பின்னர் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய செளராஷ்டிரா அணி 34 ஓவர்கள் பேட்டிங் செய்தது. இறுதியாக 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்தபோது இன்றைய ஆட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
முதல்முறையாக ரஞ்சி கோப்பையைக் கைப்பற்றும் செளராஷ்ட்டிரா கேப்டன் உனாத்கட்
ஆட்டம் டிராவில் முடிந்தாலும், முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்ற அடிப்படையில் செளராஷ்டிரா அணி ரஞ்சி டிராபி கோப்பையைக் கைப்பற்றியது. 73 வருட ரஞ்சி டிராபி வரலாற்றில் இதுவரை மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள செளராஷ்டிரா அணி, முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக செளராஷ்டிரா அணியின் அர்பித் வசவாடா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கொண்டாட்டத்தில் செளராஷ்ட்டிரா அணி
இதையும் படிங்க:வயசானாலும் இர்பான் பதானின் பேட்டிங்கும், முகமது கைஃபின் ஃபீல்டிங்கும் இன்னும் மாறவே இல்லை!