நடப்பு சீசன் ரஞ்சி கிரிக்கெட் தொடரின் மூன்றாம் சுற்று ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகின்றன. இதில், டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லியில் நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் ஃபீல்டிங் செய்ய முடிவு செய்தது.
இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி கேப்டன் ஷிகர் தவானின் சதத்தால் முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இப்போட்டியில் 207 பந்துகளை எதிர்கொண்ட தவான் 19 பவுண்டரி, இரண்டு சிக்சர் என 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் ரவி கிரண் நான்கு விக்கெட்டுகளையும், மெஹதி ஹசான் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை விளையாடிய ஹைதராபாத் அணி டெல்லி அணியின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 29 ஓவர்களில் 69 ரன்களுக்குச் சுருண்டது. ஹைதராபாத் அணி சார்பில் பவனக்கா சந்தீப் (16), சமா வி மிலிந்து (14 ) ஹிமாலே அகர்வால் (14) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கு ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.
டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா, சிமர்ஜீத் சிங் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளும் பவன் சுயல் இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதையடுத்து, முதல் இன்னிங்சில் 215 ரன்கள் பின்தங்கியதால் ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சில் விளையாடிவரும் ஹைதராபாத் அணி இரண்டாம் ஆட்டநாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 20 ரன்களை எடுத்துள்ளது. ஹிமாலே அகர்வால் ஏழு ரன்களுடனும் ஹைதராபாத் அணியின் கேப்டன் தன்மயி அகர்வால் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:மைதானத்தில் மைக்கேல் ஜாக்சனாக மாறிய ஆஸி. வீரர் - வைரல் புகைப்படம்