2019-20 ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில், குரூப் ஏ, பி பிரிவுக்கான இரண்டாம் சுற்றுப் போட்டியில் தமிழ்நாடு அணி, இமாச்சலப் பிரதேச அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடாததால் அவருக்குப் பதிலாக பாபா அபராஜித் தமிழ்நாடு அணியின் கேப்டனான நியமிக்கப்பட்டார். மேலும், இப்போட்டியில் முரளி விஜய், முருகன் அஸ்வின் ஆகியோரும் இப்போட்டியில் பங்கேற்கவில்லை.
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இமாச்சலப் பிரதேச அணி தமிழ்நாடு அணியின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதல் இன்னிங்சில் 158 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக, ஆகாஷ் வஷிஸ்ட் 35, மயாங்க் தகார் 33, சுமித் வர்மா 30 ரன்கள் அடித்தனர். இவர்களைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
தமிழ்நாடு அணி தரப்பில் அஸ்வின் ஐந்து, சாய் கிஷோர் மூன்று, கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சில் விளையாடிவரும் தமிழ்நாடு அணி மூன்று ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி எட்டு ரன்கள் எடுத்தபோது முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அபிநவ் முகுந்த் ஆறு ரன்களுடனும் கருணாகரன் முகுந்த் இரண்டு ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:ஒரு பக்கம் மனைவியின் துக்க செய்தி; மறுபக்கம் தனி ஆளாக அணியைக் காப்பாற்றிய கரீபியன் ஹீரோ!