இந்தியாவில் நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் குரூப் ஏ, பி பிரிவுகளில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு அணி கர்நாடக அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. இதனால் தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக படிக்கல் 78 ரன்களை விளாசினார். தமிழ்நாடு அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு அணி கர்நாடக அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 309 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இருந்த போதும் அணியின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் சதமடித்து 113 ரன்களை எடுத்தார். கர்நாடக அணி சார்பில் கிருஷ்ணப்பா கௌதம் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின் 27 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய கர்நாடக அணி சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 151 ரன்களுக்குள்ளேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தமிழ்நாடு அணி சார்பில் அஸ்வின் மீண்டும் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் 15 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேற, அதன் பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ஒரு கட்டத்தில் வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கர்நாடக அணியின் சுழற்பந்துவீச்சாளர் கௌதம் அதனை தகர்த்தார்.
அவரின் சுழலில் சிக்கிய தமிழ்நாடு அணி இரண்டாவது இன்னிங்ஸில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கர்நாடக அணி சார்பில் கௌதம் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் கர்நாடக அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி இத்தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சிறப்பாக பந்துவீசி அணியை வெற்றி பெற செய்த கௌதம் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியல்: ராகுல், விராட் அசத்தல்; ரோகித் பின்னடைவு!