நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
ஐசிசி பேட்டிங் தரவரிசை
இதில் இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் தொடர்ந்து முதலிடத்திலும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து இரண்டாம் இடத்திலும், இந்தியாவின் கே.எல்.ராகுல் மூன்றமிடத்தையும் பிடித்துள்ளனர்.
மேலும் இப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் குறிப்பிடத்தக்க விஷயமாக பாகிஸ்தான் அணிக்கெதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நியூசிலாந்து அணியின் டிம் செஃபெர்ட் 24 இடங்கள் முன்னேறி 9ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசை
இப்பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். இப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் இங்கிலாந்து அதில் ரஷித் (ADIL RASHID) நீடித்து வருகிறார்.
நியூசிலாந்து அணியின் டிம் சவுதி 6 இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் நியூசிலாந்து அணியின் மிட்செல் சாண்ட்னர் 2 இடங்கள் பின் தங்கி ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இம்முறை சர்வதேச டி20 கிரிக்கெட் ஆல்ரவுண்டர் தரவரிசைப்பட்டியலில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'என்னை அஸ்வினுடன் ஒப்பிடாதீர்' - நாதன் லயன்