டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இன்னிங்சில் கடவுள் என அழைக்கப்பட்டவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன். தன்னுடன் விளையாடிய வீரர்கள் குறித்தும், அவர்களிடமிருந்த தனித் திறன் குறித்தும், விவிஎஸ் லக்ஷ்மன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
சச்சின் கங்குலி ஆகியோரைக் குறித்து பதிவிட்டு வந்த லக்ஷ்மன், தற்போது ராகுல் டிராவிட் குறித்து தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "கிரிக்கெட் விளையாட்டின் அர்ப்பணிப்பு மிக்க மாணவராகவும், இந்திய அணியின் நாயகனாகவும் டிராவிட் திகழ்ந்தார். தனது முழு ஈடுபாடுடன் அனைத்து சவால்களையும் எதிர் கொண்டவர்.
ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்தது மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் ஓபனிங் பேட்ஸ்மேனாகவும் களமிறங்கியுள்ளார். இப்படி தன் முன் வைக்கப்படும் சவால்களை ஒருபோதும் முடியாது என்று கூறாமல் விடாமுயற்சியுடன் திறன்பட கையாண்டார்" என குறிப்பிட்டிருந்தார்.
ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன்
ஒருநாள் போட்டிகளில் இருமுறை 300க்கும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்ட ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர் ராகுல் டிராவிட். இவரும் லக்ஷ்மணனும் சேர்ந்து இந்திய அணிக்காக தேடித் தந்த வெற்றிகள் ஏராளம். குறிப்பாக, கடந்த 2001 கொல்கத்தாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இவர்களது சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றது ரசிகர்களால் மறக்க முடியாது.