கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணி கடந்த ஆண்டுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அந்தஸ்தை பெற்றது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடிய தனது முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து, அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணியுடன் பலப்பரீட்சை செய்துவருகிறது. இப்போட்டியின் மூலம், ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
ரஹ்மத் ஷா - அஸ்கர் ஆப்கான் அதன்படி, முதலில் பேட்டிங் செய்துவரும் ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் 77 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ரஹ்மத் ஷா - அஸ்கர் ஜோடி நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில், சிறப்பாக பேட்டிங் செய்த ரஹ்மத் ஷா 10 பவுண்ட்ரிகள், இரண்டு சிக்சர்கள் உட்பட சதம் விளாசி அசத்தினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். அதுமட்டுமில்லாமல், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தங்கள் அணிக்காக முதல் சதம் விளாசியவர்களின் வரிசையில் இவர் 12ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த ஜோடி 120 ரன்களை சேர்த்த நிலையில் ரஹ்ம்த ஷா 102 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 96 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை எடுத்துள்ளது. அஸ்கர் 88 ரன்களுடனும், அஃப்சார் ஸசாய் 35 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.