இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. நான்கு போட்டிகள் அடங்கிய இத்தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.
மேலும், இத்தொடரின் நான்காவது போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 32 வருடங்களுக்குப் பிறகு பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய முதல் அணி என்ற சாதனையையும் நிகழ்த்தியது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான நாதன் லயன் பங்கேற்றதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100ஆவது போட்டியில் விளையாடினார்.
இதனை கவுரவிக்கும் வகையில் இந்திய அணி வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை நாதன் லயனுக்கு அன்பளிப்பாக வழங்கி இந்திய அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே கவுரவப்படுத்தினார். ரஹானேவின் இச்செயலை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தனது ட்விட்டர் பதிவில், "தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய நாதன் லயனை இந்திய அணி வீரர்களும், கேப்டன் ரஹானேவும் கவுரவித்துள்ளனர். இதன் மூலம் ரஹானே சக வீரருக்கு மரியாதை அளிக்கும் பண்பு வெளிப்படுத்தியுள்ளது. அதிலும் நம்பமுடியாத ஒரு வெற்றியைப் பெற்ற பிறகும் ரஹானே இதனை செய்துள்ளது பெரும் பாராட்டுக்குறியது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘தந்தையின் கனவை சிராஜ் நிறைவேற்றிவிட்டார்’ - சகோதரர் பெருமிதம்