இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய வேகப்பந்துவீச்சளர் முகமது சிராஜை, சிட்னி மைதானத்திலிருந்த ரசிகர்கள் இனரீதியாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது.
இச்சம்பவத்திற்கு இந்தியாவிடம் மன்னிப்புக் கோருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டது. மேலும், இதுகுறித்து நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை நியூ சௌத் வேல்ஸின் எந்த கிரிக்கெட் மைதானத்திற்கும் செல்ல முடியாதபடி வாழ்நாள் தடை விதிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பதில், "நமது விளையாட்டு சமூகத்தில் இனவெறிக்கு இடமில்லை. இந்தப் பாகுபாடான செயல்கள் பொறுத்துக்கொள்ள முடியாதவை. இதுகுறித்து நான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் பேசியுள்ளேன். அவர்கள் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதிசெய்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிட்னி இனவெறி சர்ச்சைக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ஷேன் வார்னே, முன்னாள் வீரர்கள் இர்ஃபான் பதான், கௌதம் காம்பீர், அசாருதீன் எனப் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'இது மிகப்பெரும் அவமானம்; எங்கள் ரசிகர்களை நான் வெறுக்கிறேன்' - ஜஸ்டின் லங்கர்