19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே உள்ளிட்ட நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், டர்பனில் நேற்று நடைபெற்ற இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ப்ரியம் கார்க்கின் அசத்தலான சதத்தால் 50 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்களை எடுத்தது. ப்ரியம் கார்க் 103 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 110 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து, 265 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை மட்டுமே எடுத்திருந்ததால் இந்திய அணி இப்போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.