இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 15 ஆண்டுகளில் பல வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர். அவர்களில் ஒரு சிலர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திகொண்டு, தற்போது நட்சத்திர வீரர்களாக வளர்ந்துள்ளனர். ஆனால், மற்றவர்கள் தங்களிடம் போதிய திறமையிருந்தும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாமல் உள்ளனர்.
அந்த வரிசையில், இடதுகை சுழற்பந்துவீச்சாளரான பிரக்யான் ஓஜாவும் அடங்குவார். இந்திய அணியில் 2008 முதல் 2013 வரை இடம்பிடித்திருந்தாலும், டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை அஸ்வினுக்கு அடுத்தப்படியாக ஓஜாதான் முக்கிய சுழற்பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார். அதேசயம், ஐபிஎல் தொடரின் இரண்டாவது சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் (ஹைதராபாத்) அணி சாம்பியன் பட்டம் வெல்ல இவர் முக்கியக் காரணமாக இருந்தார். அந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்து பர்பிள் கேப்பை பெற்றார்.
2013இல் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதுதான் ஓஜா இந்திய அணிக்காகக் களமிறங்கிய கடைசி போட்டியும் கூட. அப்போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸிலும் தலா ஐந்து விக்கெட்டுகள் என 10 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை பெற்றார். அதுதான, சச்சினின் கடைசி போட்டி என்பதால், அவரால் நிச்சயம் அதை மறந்திருக்க முடியாது.