ஆப்கானிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் பந்தை சேதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு நான்கு டி20 போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டது. இச்சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக கடந்தாண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பேன்கிராஃப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து பேன்கிராஃப்டிற்கு ஒன்பது மாதத் தடையும், ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. இந்த தடையால் மூன்று வீரர்களும் கடுமையான அவமரியாதைகளைச் சந்தித்தனர்.
அவர்கள் தடை முடிந்து அணிக்கு திரும்பிய பின்னும் பல்வேறு கேலிகளுக்கு உள்ளாகினர். எனினும் ஸ்மித், வார்னர் ஆகியோர் தங்களின் பேட் மூலமாக கேலி செய்தோருக்கு பதிலளித்தனர். தடைக்குப்பின் திரும்பிய ஸ்மித் ஆஷஸ் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் வீரராகவும் உள்ளார்.