வெற்றிகளை விடவும் ஒரு சில தோல்விகளை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. 2003 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி அடைந்த படுதோல்வி அப்படியான ஒரு தருணம்தான்.
சரியாக 17 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் ஜோகனஸ்பர்க்கில் நடந்த இப்போட்டியில் ரிக்கி பாண்டிங் ஆடிய ஆட்டத்தை இப்போது நினைத்தாலும் இந்திய ரசிகர்களுக்கு மனக்கசப்பாக இருக்கும். 121 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், எட்டு சிக்சர்கள் என அவர் 140 ரன்களோடு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
குறிப்பாக, ஸ்ரீநாத் பந்துவீச்சில் அவர் ஒரு கையில் சிக்சர் அடித்ததால், பாண்டிங் ஸ்ப்ரிங் பேட்டை பயன்படுத்தினார் என்ற புரளி சமூக வலைதளங்கள் இல்லாத நாட்களிலேயே வேகமாக பரவியது. இதுமட்டுமின்றி, அவர் ஸ்ப்ரிங் பேட் பயன்படுத்தியதால் மீண்டும் இறுதிப் போட்டி நடைபெறும் என்ற இந்திய ரசிகர்கள் மத்தியில் பரவிய வதந்தி அப்போதைய காயத்துக்கு மருந்தாக இருந்தது. ஆனால் அந்த இறுதிப் போட்டி கடைசிவரை நடக்கவேயில்லை. ஆஸ்திரேலியா கோப்பையோடு ஊருக்கு பெட்டியைக் கட்டியது.
இந்நிலையில், 17 ஆண்டுகளுக்கு பின் தான் இறுதி போட்டியில் பயன்படுத்திய பேட்டின் புகைப்படத்தை ரிக்கி பாண்டிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த பெரும்பாலான இந்திய ரசிகர்கள், அந்த பேட்டுல ஸ்பிரிங் இருந்துச்சா இல்லையா? எப்படி ஒரு கைல சிக்ஸ் அடிச்சிங்க என பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.
இதையும் படிங்க:கேப்டனாக இன்றுவரை தலைகுனிவது 'மங்கி கேட்' சர்ச்சைக்குத்தான்!