இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மும்பையில் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ரசிகர் ஒருவர் ட்விட்டரில் ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங்கிடம், உங்களது கணிப்பின்படி இந்தத் தொடரில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பாண்டிங் தன் ட்விட்டர் பக்கத்தில், உலகக் கோப்பை தொடர், "சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அதே நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய அணி இந்தத் தொடரில் களமிறங்கும். அதேசமயம், கடந்த முறை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்விக்கு பதிலடி தரும் நோக்கில் இந்திய அணி விளையாடும். எனது கணிப்பின்படி ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் இம்முறையும் ஒருநாள் தொடரை வெல்லும்" என பதிலளித்தார்.
கடந்த சில மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசானே இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமகாவுள்ளார். இவரது ஃபார்ம் குறித்து பாண்டிங் பேசுகையில், மார்னஸ் லபுசானே சுழற்பந்துவீச்சை எதிர்த்து நன்கு விளையாடக்கூடியவர் என்பதால் ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்புவதாக தெரிவித்தார்.
உலகக் கோப்பை ஒருநாள் தொடருக்கு முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது நினைவுகூரத்தக்கது. பொதுவாகவே, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் பெரும்பாலான நேரங்களில் முக்கியம் வாய்ந்த தொடராக பார்க்கப்படும். அந்தவகையில், பாண்டிங்கின் இந்த கணிப்பால் இந்தத் தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:தோனியைப் போல் ஆட்டங்களை முடிக்க கற்றுக் கொள்ளவேண்டும்: ஆஸ்திரேலிய துணை கேப்டன்!