இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்னில் முடிவடைந்தது. இப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
அதன்பின் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே, அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் பிங்க் நிற பந்துகளைப் பயன்படுத்துவது நன்றாக இருக்கும். ஏனெனில் சிவப்பு நிற பந்துகள் 25 ஓவர்கள் வரை மட்டுமே தாக்குப்பிடிக்கும். அதன்பிற்கு அதைவைத்து ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வார்னேவின் இக்கருத்தை தான் ஏற்க மறுப்பதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கம்மின்ஸ், "நான் சிவப்பு பந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவதற்கு இன்னும் ஆசைகொண்டுள்ளேன். பிங்க் பந்தில் டெஸ்ட் போட்டிகளை விளையாடுவது சிறப்பானதாக இருந்தாலும், அவற்றை வருடத்திற்கு ஒன்று அல்லது இருமுறை விளையாடினால் மட்டுமே நன்றாக இருக்கும். ஆனால் சிவப்பு பந்தில் விளையாடுவது என்றும் சிறப்பானதாக இருக்கும்.
ஏனெனில் சிவப்பு பந்து கிரிக்கெட்டில்தான் பேட்டிங், பந்துவீச்சிற்கு சிறந்தாக இருக்கும். நாங்கள் பிங்க் பந்து கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்துள்ளோம். அதில் சமீபத்தில் முடிந்த அடிலெய்ட் டெஸ்ட் போட்டியும் அடங்கும். இருப்பினும் சிவப்பு பந்தில் விளையாடுவதே சவால் நிறைந்ததாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 7ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:பாக்ஸிங் டே டெஸ்ட்: இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!