ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதையடுத்து களமிறங்கிய சிக்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் எட்வர்ட்ஸ் ஒரு ரன்னோடு வெளியேற, பின்னர் வந்த வின்ஸும் 17 ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜோஷ் பிலிப்ஸ் - கேப்டன் ஹயூக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது.
இதில் சிறப்பாக விளையாடிய பிலிப்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் 32 ரன்களில ஹயூக்ஸ் ஆட்டமிழந்து வெளியேற, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிலிப்ஸும் 95 ரன்களில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்தது.